குறள் (Kural) - 350

குறள் (Kural) 350
குறள் #350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பொருள்
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.

Tamil Transliteration
Patruka Patratraan Patrinai Appatraip
Patruka Patru Vitarku.

மு.வரதராசனார்

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா

ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

கலைஞர்

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.

பரிமேலழகர்

பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க , விடாது வந்த பற்று விடுதற்கு. (கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருள்களையும் பற்றி நின்றே இயல்பாகப் பற்றில்லாதவனாகிய இறைவனிடத்துப் பத்தி செய்வதை மனத்திற் கொள்க ; பற்று விடற்கு - விடாது தொடர்ந்து வரும் ஆசைப் பிணிப்பு முற்றும் நீங்குதற்கு ; அப்பற்றைப் பற்றுக - அவ்விறைவன் பத்தியையே ஊழ்க ஒன்றுகைகளால் ( தியான சமாதிகளால் ) இறுகக் கடைப்பிடிக்க. சார்ந்ததன் வண்ணமாதல் ஆதன் ( ஆன்மா ) இயல்பாதலால், பற்றற்றானைப் பற்றினவன் தானும் பற்றற்றானாவன் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

மணக்குடவர்

பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)துறவு (Thuravu)