குறள் (Kural) - 348

குறள் (Kural) 348
குறள் #348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

பொருள்
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.

Tamil Transliteration
Thalaippattaar Theerath Thurandhaar Mayangi
Valaippattaar Matrai Yavar.

மு.வரதராசனார்

முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

சாலமன் பாப்பையா

ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

கலைஞர்

அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.

பரிமேலழகர்

தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார், மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார். (முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் தலைப்பட்டார் என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தீரத் துறந்தார் தலைப்பட்டார் -முற்றத்துறந்தவர் வீட்டை யடைந்து உயர்ந்தார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனந் துறவாதவர் மயங்கிப் பிறவி வலைக்குள் அகப் பட்டார். மயங்குதல் நிலையாதவற்றை நிலைத்தனவாகக் கருதுதலும் ஏதேனுமொரு பொருளின்கண் சிறிதேனும் பற்றுவைத்தலும். 'மற்றையவர்' முற்றத் துறவாதாரும் சற்றுந் துறவாதாரும். தலைப் படுதல் அடைதல் அல்லது உயர்தல்.

மணக்குடவர்

பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார். இது மறுமைப் பயன் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)துறவு (Thuravu)