குறள் (Kural) - 347

குறள் (Kural) 347
குறள் #347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

பொருள்
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

Tamil Transliteration
Patri Vitaaa Itumpaikal Patrinaip
Patri Vitaaa Thavarkku.

மு.வரதராசனார்

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

சாலமன் பாப்பையா

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

கலைஞர்

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

பரிமேலழகர்

பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பற்றினைப் பற்றி விடாதவர்க்கு -இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; இடும்பைகள் பற்றி விடா - பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி விடுவதில்லை. 'விடாஅ' ஈரிடத்தும் இசைநிறையளபெடை. 'விடாஅ தவர்க்கு வேற்றுமை மயக்கம். பற்று விடாதார்க்கு வீடில்லை யென்பதாம்.

மணக்குடவர்

பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.

புலியூர்க் கேசிகன்

பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)துறவு (Thuravu)