குறள் (Kural) - 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
பொருள்
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
Tamil Transliteration
Atalventum Aindhan Pulaththai Vitalventum
Ventiya Vellaam Orungu.
மு.வரதராசனார்
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
சாலமன் பாப்பையா
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
கலைஞர்
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
பரிமேலழகர்
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு பெற விரும்புகின்றவன் ஐம்புல இன்ப நுகர்ச்சியையுங் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும் - அதன்பின் அந்நுகர்ச்சியின் பொருட்டுத் தான் தேடிவைத்திருந்த பொருள்களை யெல்லாம் ஒருங்கே விட்டு விடுதல் வேண்டும். புல இன்ப நுகர்ச்சி வீடுபேற்று முயற்சியில் மனத்தைச் செலுத்துதற்குத் தடையாதலின் அதனை 'அடல் வேண்டும்' என்றும், அந்நுகர்ச்சிக் குரிய பொருள்கள் தன்னிடமிருப்பின் அதை விட்டமனம் மீண்டும் அவற்றின் மேற்செல்லுமாதலின் 'ஒருங்கே விடல் வேண்டும்' என்றுங் கூறினார். இதனாற் புறப்பற்று விடுதல் கூறப் பட்டது.
மணக்குடவர்
துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.
புலியூர்க் கேசிகன்
ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டு விட வேண்டும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | துறவு (Thuravu) |