குறள் (Kural) - 336

குறள் (Kural) 336
குறள் #336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருள்
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்.

Tamil Transliteration
Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku.

மு.வரதராசனார்

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

சாலமன் பாப்பையா

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

கலைஞர்

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.

பரிமேலழகர்

ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை - ஒருவன் நேற்றிருந்தான், இன்றில்லை; என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு - என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம்! உண்மை உடம்போடிருத்தலையும் இன்மை இறத்தலையும் குறிக்கும், இரட்டுறலால் உண்மை பிறத்தலையுங் குறிக்குமேனும், குழவிப் பருவத்திறப்பு மிகச் சிறுபான்மையாதலானும், குழவியை அஃறினைச் சொல்லாலன்றி ' ஒருவன் ' என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையானும், வீற்றிருந் தாளன்னை வீதி தனிலிருந்தாள் நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள் என்று பட்டினத்தடிகள் பாடியது போல், "நேற்றிருந்தான், இன்றில்லை" என்று இளைஞரையும் முதியோரையும் பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ்வுரை சிறப்புள்ளதன்றாம். ' ஒருவன்' என்னும் ஆண்பால் தலைமை பற்றிப் பெண்பால் ஒன்றன்பாலையுந் தழுவும். ' பெருமை' என்றது எதிர்ப்பொருளணி (Irony) யாதலால், ' நிலையாமை மிகுதி' என்று கொள்ளத் தேவையில்லை.

மணக்குடவர்

ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)நிலையாமை (Nilaiyaamai)