குறள் (Kural) - 278

குறள் (Kural) 278
குறள் #278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

பொருள்
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.

Tamil Transliteration
Manaththadhu Maasaaka Maantaar Neeraati
Maraindhozhuku Maandhar Palar.

மு.வரதராசனார்

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

சாலமன் பாப்பையா

மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

கலைஞர்

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.

பரிமேலழகர்

மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக, மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர். (மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மனத்தது மாசு ஆக - தம் மனத்தின்கண் குற்றமிருக்கவும் ; மாண்டார் நீராடி - தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி ; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - அதன்கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப்பலர். 'மாசு' காம வெகுளி மயக்கங்கள். நீராடியதால் உடம்பழுக்கேயன்றி உள்ளத்தழுக்கு நீங்கிற்றிலர் என்பதை யுணர்த்த 'மனத்தது மாசாக' என்றார். மாண்டார் நீராடி' என்பதற்கு மாட்சிமைப் பட்டாரது நீர்மையை யுடையராய் என்று மணக்குடவர் உரைத்ததும் ஓரளவு பொருத்த முடையதே. 'நீராடி' இரட்டுறல்.

மணக்குடவர்

மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர். இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.

புலியூர்க் கேசிகன்

மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவார்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam)