குறள் (Kural) - 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.
பொருள்
வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.
Tamil Transliteration
Purangundri Kantanaiya Renum Akangundri
Mukkir Kariyaar Utaiththu.
மு.வரதராசனார்
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
சாலமன் பாப்பையா
குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.
கலைஞர்
வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.
பரிமேலழகர்
குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினும், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம் ('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும் அது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
குன்றிப் புறம் கண்ட அனையரேனும் - வெளிக் கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் கண்டாற் போலச் செம்மை யுடையவரேனும்; அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து - உள்ளத்தில் அதன் மூக்குப்போல இருண்டிருப்பவரை உடையது இவ்வுலகம். செம்மை கருமை என்பன குன்றிமணியை நோக்கின் நிறப்பண்பும், கூடா வொழுக்கத்தினரை நோக்கின் குணப்பண்பும் , ஆகும். புறம் என்னுஞ் சொல் குன்றிக்கும் கூடாவொழுக்கத்தினர்க்கும் பொதுவாக முன்நின்றது . இங்ஙனம் நில்லாக்கால் பின்னர் வரும் அகம் என்னுஞ் சொற்கு முரணின்மை காண்க. 'குன்றி' ஆகு பெயர்.
மணக்குடவர்
புறத்தே குன்றி நிறம்போன்ற தூய வேடத்தாராயிருப்பினும், அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம். இஃது அறிஞர் தவத்தவரை வடிவு கண்டு நேர்படாரென்றது.
புலியூர்க் கேசிகன்
புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போலக் கரியவரும் உள்ளனர்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) |