குறள் (Kural) - 275

குறள் (Kural) 275
குறள் #275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

பொருள்
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.

Tamil Transliteration
Patratrem Enpaar Patitrozhukkam Etretrendru
Edham Palavun Tharum.

மு.வரதராசனார்

பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.

சாலமன் பாப்பையா

எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.

கலைஞர்

எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.

பரிமேலழகர்

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம், எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும். (சொல் அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம்- பிறர் தம்மைப் பெரிதும் மதிக்குமாறு யாம் இருவகைப் பற்றும் துறந்தேம் என்று சொல்வாரின் மறைவொழுக்கம்; எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும்-பின்புதம் தீவினைப் பயனை நுகரும்போது, அந்தோ என் செய்தேன் என் செய்தேன் என்று தனித்தனியே வருந்திப் புலம்புமாறு, அவருக்குப் பல்வகைத் துன்பங்களையும் உண்டாக்கும். சொல்லளவிலன்றிச் செயலளவிற் பற்றறாமையின் 'பற்றறே மென்பார்' என்றும் தீவினைப்பயன் கடுமை நோக்கி 'எற்றெற்று' என்றும், கூறினார். தவவடிவில் மறைந்து பிறர் மகளிரொடு கூடுதல் இருமடித் தீவினையாதலின், அதன் விளைவும் மிகக் கொடிதாயிற்று. எற்று என்பது கடந்த நிலைமை நோக்கி வருந்துவதைக் குறிக்கும் இடைச் சொல். என்னது-எற்று(என்+து)=எத்தன்மைத்து. எற்றென் கிளவி இறந்த பொருட்டே. என்பது தொல்காப்பியம் (இடையியல் , 15).

மணக்குடவர்

பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம் எல்லாரும் எற்றெற் றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும். எற்றென்பது திசைச்சொல். இது தீமைபயக்கு மென்றது.

புலியூர்க் கேசிகன்

பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், ‘என்ன செய்தோம்?’ என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam)