குறள் (Kural) - 274

குறள் (Kural) 274
குறள் #274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

பொருள்
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.

Tamil Transliteration
Thavamaraindhu Allavai Seydhal Pudhalmaraindhu
Vettuvan Pulsimizhth Thatru.

மு.வரதராசனார்

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா

மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.

கலைஞர்

புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.

பரிமேலழகர்

தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும்.( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தவம் மறைந்து அல்லவை செய்தல்-மனத்தை யடக்கும் வலிமையில்லாதவன் தவக்கோலத்தின்கண் மறைந்து நின்று கூடா வொழுக்கம் ஒழுகுதல்; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்த அற்று-வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும். 'தவம் ' ஆகு பொருளது.

மணக்குடவர்

தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.

புலியூர்க் கேசிகன்

தவக் கோலத்திலே மறைந்து கொண்டு தீயசெயல்களைச் செய்தல், கொலை குறித்த வேடன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam)