குறள் (Kural) - 269

குறள் (Kural) 269
குறள் #269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

பொருள்
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

Tamil Transliteration
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul.

மு.வரதராசனார்

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

கலைஞர்

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

பரிமேலழகர்

கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு-தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றம் குதித்தலும் கைகூடும்-கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம். கூற்றுவனை வெல்வதாவது சாவினின்று தப்புதல். அது இங்கு ஒருவர்க்குங் கூடாமையின் உம்மை எதிர்மறை. மார்க்கண்டேயன் இன்று மண்ணுலகில் இல்லாமையாலும், வேறுலகிலுள்ளான் என்பது உண்மைக்கும் உத்திக்கும் பொருந்தாமையாலும், அவனைப் பற்றிய கட்டுக் கதையை இங்கு எடுத்துக்காட்டுவது எள்ளளவும் ஏற்காது. வீட்டிலகிலுள்ளா னெனின் அது உரையளவையாற் பொருந்தும். ஆயின், அதற்கும், இறைவனே அவனை என்றும் பதினாறாட்டை யுலக வாழ்வினனாக்கினான் என்பது தடை யாகும். இறைவன் முன்பு தீர்மானித்த தொன்றைப் பின்பு மாற்றினானெனின், அது அவன் இறைமையை நீக்கி மாந்தத் தன்மையையே ஊட்டும். 'ஆற்றல்' ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்' ஆம்.

மணக்குடவர்

கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு. இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.

புலியூர்க் கேசிகன்

தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)தவம் (Thavam)