குறள் (Kural) - 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
பொருள்
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
Tamil Transliteration
Unnaamai Ulladhu Uyirnilai Oonunna
Annaaththal Seyyaadhu Alaru.
மு.வரதராசனார்
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
சாலமன் பாப்பையா
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
கலைஞர்
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
பரிமேலழகர்
உயிர் நிலை உண்ணாமை உள்ளது - ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது. (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உயிர்நிலை ஊன் உண்ணாமை உள்ளது-ஒருசார் உயிர்கள் உடம்பொடு கூடி நிற்றல் ஊனுண்ணாமையாகிய அறத்தால் நேர்வது; ஊன் உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது-ஆதலால், ஒருவன் ஊனுண்பானாயின், அவனை விழுங்கிய நரகம் பின்பு அவனை வெளிப்படுத்தற்கு வாய் திறவாது. உண்ணப்படும் உயிரிவகைகள் வரவரத் தொகை குறைந்து வருவதனாலும், சில காட்டுயிரிகள் நாளடைவில் அற்றும் போவதனாலும், 'உண்ணாமையுள்ள துயிர்நிலை' என்றார். உயிர்களெல்லாம் நிற்றியம் என்பது கொள்கையாதலின், உண்ணப்படும் உயிர்கள் குறையின் உண்ணப்படா வுயிரிகள் கூடும் என்பதாம். ஊனுண்டவன் நீண்டகாலம் நரகத்தில் துன்புறுவான் என்பது 'அண்ணாத்தல் செய்யா தளறு' என்பதன் கருத்தாம். ஊன் என்பது முன்னும் பின்னுஞ் சென்றிசைதலின் தாப்பிசைப் பொருள்கோளும் இடைநிலை விளக்கணியுமாகும். நிற்றியம்-நித்ய(வ.).
மணக்குடவர்
புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின். இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில்தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியே விட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | புலால் மறுத்தல் (Pulaanmaruththal) |