குறள் (Kural) - 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
பொருள்
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
Tamil Transliteration
Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu.
மு.வரதராசனார்
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
சாலமன் பாப்பையா
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம்,
ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால்
காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
கலைஞர்
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
பரிமேலழகர்
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உரன் என்னும் தோட்டியான் - அறிவு என்னும் துறட்டியினால், ஓரைந்தும் காப்பான் - பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன்; வரன் என்னும் வைப்பிற்கு - எல்லா நிலங்களுள்ளும் மேலான வீட்டு நிலத்திற்போய் முளைத்தற்குரிய; ஓர் வித்து - ஒரு விளைந்த மணி விதை போல்வான். உரனைத் துறட்டியாக உருவகித்துப் பொறிகளை யானைகளாக உருவகியாதது ஒருமருங்குருவகம். துறடு - துறட்டி - தோட்டி. புரம் = மேல், மேன்மாடம். புரம் - பரம் = மேல், மேலிடம், மேலுலகம். பரம் - வரம் = மேன்மை. வரம் - வரன் (கடைப்போலி) = மேலுலகம், வீட்டுலகம். இனி, வைப்பு என்பதற்குச் சேர்த்து வைக்கும் இடம் என்று பொருள்கொண்டு, வீட்டுலமாகிய களஞ்சியத்திற் சேர்த்துவைக்கப் பெறும் விளைந்த மணிபோல்வான் என்று உரைக்கினும் பொருந்தும்.
மணக்குடவர்
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
புலியூர்க் கேசிகன்
அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் (Paayiraviyal) |
அதிகாரம் (Adhigaram) | நீத்தார் பெருமை (Neeththaar Perumai) |