குறள் (Kural) - 238

குறள் (Kural) 238
குறள் #238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

பொருள்
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.

Tamil Transliteration
Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum
Echcham Peraaa Vitin.

மு.வரதராசனார்

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா

புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

கலைஞர்

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.

பரிமேலழகர்

இசை என்னும் எச்சம் பெறாவிடின் - புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர். ( 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின்' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இசை என்னும் எச்சம் பெறாவிடின்-ஒருவன் புகழைத் தனக்குப் பின் நிறுத்தாவிடின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப- அது உலகத்திலுள்ள மக்கட் கெல்லாம் பழிப்பாகு மென்று கூறுவர் நல்லோர். புகழ் மக்களைப் போல எஞ்சி நிற்பது என்னுங் கருத்துப்பட 'எச்சம் பெறாஅ விடின்' என்றார். மக்களெல்லாரும் ஓரினத்தாராதலானும், புகழ்பட வாழ்தலே உயர்திணைப் பண்பாதலானும், ஒருவன் பழி அவன் இனத்தையும் சாரும் என்னும் நெறிமுறை பற்றி, வையத்தார்க் கெல்லாம் வசை யென்றார். 'பெறாஅ' இசைநிறை யளபெடை.

மணக்குடவர்

உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர். மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.

புலியூர்க் கேசிகன்

தமக்குப் பின்னரும் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புகழ் (Pukazh)