குறள் (Kural) - 14

குறள் (Kural) 14
குறள் #14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

Tamil Transliteration
Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrik Kaal.

மு.வரதராசனார்

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

சாலமன் பாப்பையா

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

கலைஞர்

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

பரிமேலழகர்

உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உழவர் ஏரின் உழார் - உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார். சுழல்காற்று மழையைக் குறிக்கும் புயல் (Cyclone) என்னும் சொல் இங்குப் பொதுப்பொருளில் ஆளப்பட்டது. பசி உயிர்களை வருத்துதற்குக் கரணியங் கூறியவாறு. உழாஅர் என்பது இசைநிறை யளபெடை. குன்றியக்கால் என்பது குன்றிக்கால் எனக்குறைந்து நின்றது. குன்றுதல் இங்கு இன்மையாதல்.

மணக்குடவர்

ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.

புலியூர்க் கேசிகன்

மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)வான்சிறப்பு (Vaansirappu)