குறள் (Kural) - 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
பொருள்
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
Tamil Transliteration
Vinindru Poippin Virineer Viyanulakaththu
Ulnindru Utatrum Pasi.
மு.வரதராசனார்
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சாலமன் பாப்பையா
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.
கலைஞர்
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
பரிமேலழகர்
விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
விண் இன்று பொய்ப்பின் - வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின்; விரிநீர் வியன் உலகத்துள் - பரந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண்; பசிநின்று உடற்றும் - பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும். ஞாலத்தின் (பூமியின்) முக்காற் பங்கு என்றும் வற்றாக் கடலாயினும் அதனாற் பஞ்சக்காலத்திற் பயனில்லையென்பதை, விரிநீர் என்னும் அடைமொழியாற் குறிப்பாக வுணர்த்தினார், வருத்துதலாவது உணவு விளையாமையால் மீண்டும் மழை பெய்யும்வரை கொல்லுதலும் துன்புறுத்துதலும். பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது பெய்யாமை பொய்த்தது போலாயிற்று.
மணக்குடவர்
வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் (Paayiraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வான்சிறப்பு (Vaansirappu) |