குறள் (Kural) - 1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
பொருள்
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.
Tamil Transliteration
Ootal Unanga Vituvaarotu Ennenjam
Kootuvem Enpadhu Avaa.
மு.வரதராசனார்
ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.
சாலமன் பாப்பையா
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.
கலைஞர்
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. (அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
(புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.) ஊடல் உணங்க விடுவாரோடு - ஊடல்கொண்ட போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு; என் நெஞ்சம் கூடுவேம் என்பது - என் உள்ளம் கூடியின்புறுவேம் என்று, கருதுகிறதற்குக் கரணியம்; அவா - அதன் ஆசையேயன்றி வேறன்று. இதற்குப் பரிமேலழகருரை வருமாறு - (உணர்ப்புவயின் வாராவூடற்கட்டலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது.) ஊடல் உணங்க - தானூடற்கண்ணே மெலியா நிற்கவும்; விடுவாரோடு கூடுவேம் என்பது என்னெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயறற்கேது தன்னவாவே பிறிதில்லை. என்பதற்கேது என இருக்கவேண்டியது. 'என்பது' எனக் கருமகம் (காரியம்) கரணமாக (காரணமாக) ச்சார்த்திக் கூறப்பட்டது.
மணக்குடவர்
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.
புலியூர்க் கேசிகன்
ஊடல் கொண்ட போது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் ‘கூடுவோம்’ என்று நினைப்பது, அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | புலவி (Pulavi) |