குறள் (Kural) - 1304

குறள் (Kural) 1304
குறள் #1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

பொருள்
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

Tamil Transliteration
Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru.

மு.வரதராசனார்

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

சாலமன் பாப்பையா

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

கலைஞர்

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஊடியவரை உணராமை-நும்மொ டூடிய பரத்தை யரை ஊடல் தீர்த்துக் கூடாது விடுதல் ; வாடிய வள்ளி முதல் அரிந்த அற்று - முன்பே நீர் பெறாது வாடிய கொடியை அடியில் அறுத்துவிட்டாற் போலும் . நீர் பரத்தையரோ டிருக்குங்கால் எம் புதல்வரைக் கொண்டாற்றியிருக்கத் தக்கேமாகிய யாம் , நும்மோ டூடுதற் குரியே மல்லேம் . ஆதலால் எம்மை யுணர்த்தல் வேண்டேம் . எம்மினும் நுமக்குரியாரா யூடிய பரத்தையரையே யுணர்த்துதல் வேண்டும் . ஆதலால் அங்கேயே சென்மின் என்பதாம் .

மணக்குடவர்

நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும். இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.

புலியூர்க் கேசிகன்

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப் போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பது போன்றது ஆகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புலவி (Pulavi)