குறள் (Kural) - 1268

குறள் (Kural) 1268
குறள் #1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

பொருள்
தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

Tamil Transliteration
Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu
Maalai Ayarkam Virundhu.

மு.வரதராசனார்

அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

சாலமன் பாப்பையா

அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.

கலைஞர்

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

பரிமேலழகர்

(வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.(மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.)

புலியூர்க் கேசிகன்

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக; யானும், என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப் பொழுதில், அவளோடு விருந்தை அனுபவிப்பேன்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal)