குறள் (Kural) - 1264

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
பொருள்
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.
Tamil Transliteration
Kootiya Kaamam Pirindhaar Varavullik
Kotuko Terumen Nenju.
மு.வரதராசனார்
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
சாலமன் பாப்பையா
என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.
கலைஞர்
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது. (வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள், 'ஒடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. 'அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்', என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே!
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal) |