குறள் (Kural) - 1262

குறள் (Kural) 1262
குறள் #1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

பொருள்
காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

Tamil Transliteration
Ilangizhaai Indru Marappinen Tholmel
Kalangazhiyum Kaarikai Neeththu.

மு.வரதராசனார்

தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

சாலமன் பாப்பையா

ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.

கலைஞர்

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

பரிமேலழகர்

(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். ('இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது , 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன்',என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

தோழி! அவரைப் பிரிந்து வருந்திருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகுகெட்டு மெலியும்; என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal)