குறள் (Kural) - 1258

குறள் (Kural) 1258
குறள் #1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

பொருள்
நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?.

Tamil Transliteration
Panmaayak Kalvan Panimozhi Andronam
Penmai Utaikkum Patai.

மு.வரதராசனார்

நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?.

சாலமன் பாப்பையா

என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!.

கலைஞர்

நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?.

பரிமேலழகர்

(இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன்அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று, தம் பெண்மை என்னும் அரணை உடைக்கும் படையாய் இருந்தன

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நிறையழிதல் (Niraiyazhidhal)