குறள் (Kural) - 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
பொருள்
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.
Tamil Transliteration
Setravar Pinseral Venti Aliththaro
Etrennai Utra Thuyar.
மு.வரதராசனார்
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்தோ!.
சாலமன் பாப்பையா
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.
கலைஞர்
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.
பரிமேலழகர்
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலே இருப்பதனால், என்னை அடைந்த இக் காமநோயானது எத்தன்மை உடையதோ!
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | நிறையழிதல் (Niraiyazhidhal) |