குறள் (Kural) - 1249

குறள் (Kural) 1249
குறள் #1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

பொருள்
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.

Tamil Transliteration
Ullaththaar Kaadha Lavaraal Ullinee
Yaaruzhaich Cheriyen Nenju.

மு.வரதராசனார்

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

சாலமன் பாப்பையா

என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.

கலைஞர்

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.

பரிமேலழகர்

(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து, அதனை ஒழி' என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

என் நெஞ்சமே! காதலர் நம் உள்ளத்துக்குள்ளேயே இருப்பவராகவும், நீதான் அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கின்றாயோ?

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு கிளத்தல் (Nenjotukilaththal)