குறள் (Kural) - 1242

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
பொருள்
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.
Tamil Transliteration
Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju.
மு.வரதராசனார்
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.
சாலமன் பாப்பையா
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
கலைஞர்
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.
பரிமேலழகர்
(தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை.('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய், இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | நெஞ்சொடு கிளத்தல் (Nenjotukilaththal) |