குறள் (Kural) - 1226

குறள் (Kural) 1226
குறள் #1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

பொருள்
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

Tamil Transliteration
Maalainoi Seydhal Manandhaar Akalaadha
Kaalai Arindha Thilen.

மு.வரதராசனார்

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

சாலமன் பாப்பையா

முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

கலைஞர்

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

பரிமேலழகர்

('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.)மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னை விட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)பொழுதுகண்டு இரங்கல் (Pozhudhukantirangal)