குறள் (Kural) - 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
பொருள்
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
Tamil Transliteration
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum.
மு.வரதராசனார்
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
சாலமன் பாப்பையா
அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.
கலைஞர்
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
காதலர் அருகே இல்லாத போது, கொலை செய்யும் இடத்திலே ஆறலைப்பார் வருவதைப் போல, இம் மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே!
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பொழுதுகண்டு இரங்கல் (Pozhudhukantirangal) |