குறள் (Kural) - 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
பொருள்
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
Tamil Transliteration
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku.
மு.வரதராசனார்
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
சாலமன் பாப்பையா
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
கலைஞர்
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது. (காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக் கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்து நமக்குத் தோன்றுகின்றன
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | கனவுநிலை உரைத்தல் (Kanavunilaiyuraiththal) |