குறள் (Kural) - 1211

குறள் (Kural) 1211
குறள் #1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

பொருள்
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.

Tamil Transliteration
Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku
Yaadhusey Venkol Virundhu.

மு.வரதராசனார்

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

சாலமன் பாப்பையா

என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.

கலைஞர்

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.

பரிமேலழகர்

(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.)

புலியூர்க் கேசிகன்

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)கனவுநிலை உரைத்தல் (Kanavunilaiyuraiththal)