குறள் (Kural) - 1209

குறள் (Kural) 1209
குறள் #1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

பொருள்
``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

Tamil Transliteration
Viliyumen Innuyir Verallam Enpaar
Aliyinmai Aatra Ninaindhu.

மு.வரதராசனார்

நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

சாலமன் பாப்பையா

நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

கலைஞர்

நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

பரிமேலழகர்

(தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு)

புலியூர்க் கேசிகன்

‘நாம் இருவரும் வேறானவர் அல்லேம்’ என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal)