குறள் (Kural) - 1203

குறள் (Kural) 1203
குறள் #1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

பொருள்
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.

Tamil Transliteration
Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal
Sinaippadhu Pondru Ketum.

மு.வரதராசனார்

தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.

சாலமன் பாப்பையா

எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.

கலைஞர்

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.

பரிமேலழகர்

(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் துமமல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.)

புலியூர்க் கேசிகன்

தும்மல் எழுவது போலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே! அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்து நினையாமற் போயினாரோ!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal)