குறள் (Kural) - 1201

குறள் (Kural) 1201
குறள் #1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

பொருள்
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

Tamil Transliteration
Ullinum Theeraap Perumakizh Seydhalaal
Kallinum Kaamam Inidhu.

மு.வரதராசனார்

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா

முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

கலைஞர்

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

பரிமேலழகர்

(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.(தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு)

புலியூர்க் கேசிகன்

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal)