குறள் (Kural) - 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
பொருள்
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.
Tamil Transliteration
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar
Nannilaiyar Aavar Enin.
மு.வரதராசனார்
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
சாலமன் பாப்பையா
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.
கலைஞர்
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.
பரிமேலழகர்
(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)
புலியூர்க் கேசிகன்
‘பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார்’ என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக!
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) |