குறள் (Kural) - 1187

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
பொருள்
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!.
Tamil Transliteration
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil
Allikkol Vatre Pasappu.
மு.வரதராசனார்
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.
சாலமன் பாப்பையா
முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
கலைஞர்
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!.
பரிமேலழகர்
(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது. ('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) |