குறள் (Kural) - 1182

குறள் (Kural) 1182
குறள் #1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

பொருள்
பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!.

Tamil Transliteration
Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen
Menimel Oorum Pasappu.

மு.வரதராசனார்

அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

சாலமன் பாப்பையா

இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

கலைஞர்

பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!.

பரிமேலழகர்

(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

‘அவர் தந்தார்’ என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும், என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral)