குறள் (Kural) - 1180

குறள் (Kural) 1180
குறள் #1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

பொருள்
காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.

Tamil Transliteration
Maraiperal Ooraarkku Aridhandraal Empol
Araiparai Kannaar Akaththu.

மு.வரதராசனார்

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

சாலமன் பாப்பையா

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

கலைஞர்

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.

பரிமேலழகர்

('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.'('மறை' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்'என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal)