குறள் (Kural) - 1178

குறள் (Kural) 1178
குறள் #1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

பொருள்
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!.

Tamil Transliteration
Penaadhu Pettaar Ularmanno Matravark
Kaanaadhu Amaivila Kan.

மு.வரதராசனார்

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

சாலமன் பாப்பையா

உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.

கலைஞர்

என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!.

பரிமேலழகர்

('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.)பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)

புலியூர்க் கேசிகன்

உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் என்ன பயன்? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal)