குறள் (Kural) - 1175

குறள் (Kural) 1175
குறள் #1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

பொருள்
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

Tamil Transliteration
Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak
Kaamanoi Seydhaen Kan.

மு.வரதராசனார்

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

சாலமன் பாப்பையா

கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

கலைஞர்

கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

பரிமேலழகர்

(இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது)

புலியூர்க் கேசிகன்

கடலிலும் பெரிதான காமநோயை அன்று எனக்குச் செய்த இக் கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal)