குறள் (Kural) - 1171

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
பொருள்
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.
Tamil Transliteration
Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi
Thaamkaatta Yaamkan Tadhu.
மு.வரதராசனார்
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.
சாலமன் பாப்பையா
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.
கலைஞர்
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.
பரிமேலழகர்
(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண் தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் (Karpiyal) |
அதிகாரம் (Adhigaram) | கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) |