குறள் (Kural) - 117

குறள் (Kural) 117
குறள் #117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

பொருள்
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

Tamil Transliteration
Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka
Nandrikkan Thangiyaan Thaazhvu.

மு.வரதராசனார்

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

சாலமன் பாப்பையா

நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

கலைஞர்

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

பரிமேலழகர்

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம் - வறுமை என்று கருதார் உயர்ந்தோர். (கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம். கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுநிலை நின்று அறத்தின்கண் தங்கினவனது வறுமையை ; உலகம் கெடுவாக வையாது - உயர்ந்தோர் கேடாகக் கருதார் . 'கேடு' என்பது முதனிலைத் தொழிற் பெயர் . உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே "உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் " (திருமுரு . கஉச). கெடுவாக வையாது எனவே , செல்வமாகக் கொள்ளும் என்பது கருத்து . "ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து ." (220) என்பதால் அறத்தினால் வருங்கேடெல்லாம் விரும்பத் தக்கது என்பதே அறிஞர் கொள்கை.

மணக்குடவர்

நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.

புலியூர்க் கேசிகன்

நடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒரு போதும் கொள்ளாது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)நடுவு நிலைமை (Natuvu Nilaimai)