குறள் (Kural) - 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
பொருள்
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.
Tamil Transliteration
Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam
Natuvoreei Alla Seyin.
மு.வரதராசனார்
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
கலைஞர்
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.
பரிமேலழகர்
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருதுமாயின் ; யான் கெடுவல் என்பது அறிக - அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு , " நான் இனிக்கேடடைவேன் , " என்று திட்டமாய் அறிந்து கொள்க. கருதுதல் மனத்தின் செயலாதலின் ' செயின் ' என்றார் . ஒருவி என்பது ஒரீஇ என அளபெடுத்தது இன்னிசை யளபெடை . நெஞ்சார நடுநிலை திறம்புவார்க்கு எச்சரிக்கை இக்குறளாற் கூறப் பட்டது.
மணக்குடவர்
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.
புலியூர்க் கேசிகன்
தன் நெஞ்சமானது நடுவுநிலைமையிலிருந்து விலகி, தவறு செய்பவன், ‘யான் இதனால் கெடுவேன்’ என்பதனையும் அறிந்து கொள்வானாக!
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | நடுவு நிலைமை (Natuvu Nilaimai) |