குறள் (Kural) - 1169

குறள் (Kural) 1169
குறள் #1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

பொருள்
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

Tamil Transliteration
Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal
Netiya Kazhiyum Iraa.

மு.வரதராசனார்

( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

சாலமன் பாப்பையா

இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.

கலைஞர்

இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal)