குறள் (Kural) - 1161

குறள் (Kural) 1161
குறள் #1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

பொருள்
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.

Tamil Transliteration
Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku
Ootruneer Pola Mikum.

மு.வரதராசனார்

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

சாலமன் பாப்பையா

என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

கலைஞர்

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.

பரிமேலழகர்

(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது. ('அம்மறைத்தலால் பயன் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்' என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை'என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்' என்பதாம்.]

புலியூர்க் கேசிகன்

பிரிவுத் துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அ·து ஊற்று நீரைப் போல மேன்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal)