குறள் (Kural) - 1157

குறள் (Kural) 1157
குறள் #1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

பொருள்
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!.

Tamil Transliteration
Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai.

மு.வரதராசனார்

என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

சாலமன் பாப்பையா

அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?.

கலைஞர்

என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!.

பரிமேலழகர்

(இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்யாயை நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)

புலியூர்க் கேசிகன்

நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ?

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai)