குறள் (Kural) - 1155

குறள் (Kural) 1155
குறள் #1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

பொருள்
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.

Tamil Transliteration
Ompin Amaindhaar Pirivompal Matravar
Neengin Aridhaal Punarvu.

மு.வரதராசனார்

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

சாலமன் பாப்பையா

என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

கலைஞர்

காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)

புலியூர்க் கேசிகன்

என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக; அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai)