குறள் (Kural) - 1152

குறள் (Kural) 1152
குறள் #1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

பொருள்
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!.

Tamil Transliteration
Inkan Utaiththavar Paarval Pirivanjum
Punkan Utaiththaal Punarvu.

மு.வரதராசனார்

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா

அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!.

கலைஞர்

முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!.

பரிமேலழகர்

(பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பமுடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.('பார்வல்' என்றதனால், புணர்ச்சி பெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, 'முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந் தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்' (கலித்-பாலை-3)பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதிற் குறிப்புக் காட்டிஅச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)

புலியூர்க் கேசிகன்

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai)