குறள் (Kural) - 1133

குறள் (Kural) 1133
குறள் #1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

பொருள்
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

Tamil Transliteration
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal.

மு.வரதராசனார்

நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா

நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

கலைஞர்

நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

பரிமேலழகர்

('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)நாணுத் துறவுரைத்தல் (Naanuththuravuraiththal)