குறள் (Kural) - 1076

குறள் (Kural) 1076
குறள் #1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

பொருள்
மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

Tamil Transliteration
Araiparai Annar Kayavardhaam Ketta
Maraipirarkku Uyththuraikka Laan.

மு.வரதராசனார்

கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

சாலமன் பாப்பையா

தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

கலைஞர்

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

பரிமேலழகர்

தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக் கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)கயமை (Kayamai)