குறள் (Kural) - 1040

குறள் (Kural) 1040
குறள் #1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

பொருள்
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

Tamil Transliteration
Ilamendru Asaii Iruppaaraik Kaanin
Nilamennum Nallaal Nakum.

மு.வரதராசனார்

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

சாலமன் பாப்பையா

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

கலைஞர்

வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

பரிமேலழகர்

இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும்.(உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.)

புலியூர்க் கேசிகன்

‘யாம் வறியோம்’ என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்திப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)உழவு (Uzhavu)