குறள் (Kural) - 1021

குறள் (Kural) 1021
குறள் #1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

பொருள்
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

Tamil Transliteration
Karumam Seyaoruvan Kaidhooven Ennum
Perumaiyin Peetutaiyadhu Il.

மு.வரதராசனார்

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா

வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

கலைஞர்

உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

பரிமேலழகர்

கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் - தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. ('குடி செயற்கு' என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.)

புலியூர்க் கேசிகன்

‘என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓயமாட்டேன்’ என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்கு சிறந்த பெருமை தருவது வேறில்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)குடிசெயல் வகை (Kutiseyalvakai)