குறள் (Kural) - 1019

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
பொருள்
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.
Tamil Transliteration
Kulanjutum Kolkai Pizhaippin Nalanjutum
Naaninmai Nindrak Katai.
மு.வரதராசனார்
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
கலைஞர்
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.
பரிமேலழகர்
கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டுவிடும்; ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது, அது அவன் நலத்தை எல்லாமே சுடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | நாணுடைமை (Naanutaimai) |